திங்கள், 16 மார்ச், 2026

பாஷாண லிங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன் - ஒரு நூல் - இரு வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


பாஷாண லிங்கம் - எங்கள் இருவரின் வாசிப்பனுபவம் இன்றைய பதிவாக… முதலில் வருவது இல்லத்தரசியின் வாசிப்பனுபவம்!



சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் நாங்கள் வாங்கிய புத்தகங்களில் இந்திரா சாரின் புத்தகம் ஒன்றை வாசிக்கலாம் என எடுத்தேன்! புத்தக வாசிப்பில் ஆழ்ந்து போய் நெடுநாளாகி விட்டது! என்னவோ வேலைகள்! தொடர்ந்து என்னால் வாசிக்க முடிவதேயில்லை! இந்த புத்தகம் கூட  சிறியது தான்! அதை நான் வாசிக்க நான்கு நாட்கள் ஆச்சு! சரி! புத்தகத்துக்குள் செல்வோம்!


இந்திரா சாரின் கதைகள் என்றால் பெரும்பாலும் சிவத்தையும் சித்தர்களையும் சுற்றித் தான் இருக்கும்!! அதில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது! பாஷாண லிங்கம் என்று சொல்லப்படுகிற இந்தக் கதை சதுரகிரியை பற்றியும் அங்கு வாழும் சித்தர் பெருமக்களைப் பற்றியதாக இருக்கிறது!


மலையில் வசிப்பதற்கும் நிலத்தில் வசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்றும் தட்பவெப்பம் மட்டுமல்லாது மனநிலையிலும் இருக்கும் என்று நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்! அதனால் தான் சித்த புருஷர்கள் எல்லாம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள மலையை தேர்வு செய்கிறார்களாம்! அதிலும் அமைப்பில் முற்றிலும் வேறுபட்ட சதுரகிரி சிறப்பு மிக்கது! அந்த பிரதேசத்தில் நாம் நுகரும் காற்று கூட வியாதிகளை போக்க வல்லது என்று சொல்லப்படுகிறது!


ஆனந்தன் அவன் மனைவி மகாலட்சுமி மகள் பவித்ரா என மூவருமே வாழ்வின் விளிம்புக்கு சென்று விடும் சூழல்! ஓடித் திரியும் பதின்ம பருவத்தில் இருக்கும் பவித்ராவுக்கு அரிய ஒரு நோய்! ஆனந்தனின் குறுகிய வருமானத்தில் குடும்பத்தை சரிவர நடத்தவே சிரமப்படும் சூழலில் மகளுக்கு என்னவென்றே தெரியாத ஒரு நோய்!


ஊரைச் சுற்றி வாங்கிய கடன் ஒருபுறம்! தீராத நோயால் அவதிப்படும் மகள் ஒருபுறம் என சூழ்நிலைகள் அவரை ரொம்பவே சூழ்ந்து கொள்ள முடிவைத் தேடி பக்கத்து வீட்டில் வசிக்கும் விபூதி தாத்தா கொடுத்த பஞ்சாமிர்தத்தில் வி*ஷ*த்*தை கலந்து மூவருமே எடுத்துக் கொள்கின்றனர்! இனிமே எந்தத் தொல்லையும் இல்லை! எதற்கும் பயப்பட வேண்டாம்! என்று எண்ணிக் கொண்டிருந்தனர் ஆனந்தனும் அவன் மனைவியும்!


நேரம் தான் கடந்ததே தவிர அவர்கள் மூவருக்கும் எதுவும் நேரவில்லை! மாறாக முன்பை விட இப்போது மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டனர்! சோர்ந்தே கிடக்கும் மகள் கூட இப்போது அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள்! அவர்கள் எடுத்துக் கொண்ட பஞ்சாமிர்தத்தை பற்றி ஆனந்தன் அவன் மனைவியிடம் விசாரிக்க அவள் விபூதி தாத்தா சித்தர் மலையிலிருந்து கொண்டு வந்ததாகச் சொன்னாள்!


விபூதி தாத்தாவைத் தேடி சித்தர் மலை என்று சொல்லப்படும்  சதுரகிரியை நோக்கி ஆனந்தன் பயணம் மேற்கொள்கிறான். செல்லும் பாதையெங்கும் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடனான அனுபவங்கள், சவால்கள், திருப்பங்கள் என பக்கத்திற்கு பக்கம் நம்மையும் மனதால் சதுரகிரியை நோக்கி பயணிக்க வைக்கும் எழுத்து!


ஆனந்தன் இறுதியில் விபூதி தாத்தாவை சந்தித்தானா? அவன் மகளின் தீராத நோய் குணமானதா? சதுரகிரியில் காட்சித் தரும் சந்தன மகாலிங்கமும், சித்தர் பெருமக்களும் அவன் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள் தான் என்ன? என்ற உங்கள் அத்தனை கேள்விகளுக்குமான விடையாக இந்தப் புத்தகம் நிச்சயம் இருக்கும்!


புஸ்தகாவின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூலின் விலை ரூ 110. வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாங்கி வாசியுங்களேன்!


நட்புடன்


ஆதி வெங்கட்


*******


சதுரகிரி குறித்த கதை தான் பாஷாண லிங்கம் என்று இல்லத்தரசி சொன்னதும் எடுத்து வாசிக்கத் துவங்கிவிட்டேன்.  சமீபத்தில் தான் சதுரகிரி இரண்டாம் முறையாக பயணித்து வந்திருந்தேன் என்பதால் இந்த நூல் வாசிப்பதில் இன்னும் அதிக ஆர்வம் இருந்தது.  கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கியவன், அதனை முடித்த பிறகே அடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றேன்.  நான் வாசித்த நேரம் அதிகாலை! ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்த புத்தகம் புஸ்தகா வெளியீடாக வந்திருக்கிறது.  விலை ரூபாய் 110/- மட்டும்.  முதலாம் பதிப்பு - 2024-இல் வெளிவந்திருக்கிறது. மின்னூலாகவும் புஸ்தகா தளத்தில் வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.  சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்.  


சதுரகிரி - நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் ஆலயங்கள்.  சதுரகிரி மலை குறித்தும் அதன் உள்ளே பொதிந்திருக்கும் அதிசயங்களும் குறித்த கதைகள் நிறையவே உண்டு.  தற்போது இருக்கும் ஆலயங்களை விட அங்கே பெரும்பாலும் அனுமதிக்கப்படாத மலைப்பகுதிகளிலும் இருக்கும் சிவலிங்கங்கள் குறித்த கதைகள் நிறையவே உண்டு.  அதனைக் குறித்த சில விஷயங்களை இந்தக் கதை வழி நமக்குச் சொல்லி இருக்கிறார்.  சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பதால் எங்கே எந்த உருவில் சித்தர்கள் இருக்கிறார்களோ என்ற எண்ணம் அங்கே போகும்போது எனக்கு வருவதுண்டு.  கோரக்கர் குகைக்குள் இருக்கும் சிவலிங்கத்தினை வணங்கச் சென்றபோது அங்கே உள்ள சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சிலைகளுக்குப் பின்னால் ஒரு பைரவர் படுத்திருந்தார்.  ஆனால் ஊர்ந்து பார்த்தால் தான் தெரிந்தார்.  அவர் கூட ஒரு சித்தராக இருக்கக்கூடும் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  


கதை ஆரம்பிக்கும்போதே பிரச்சனைகளில் உழலும் ஒரு குடும்பம் - கணவன், மனைவி மற்றும் மகள் - மகளுக்கு இருக்கும் லட்சங்களில் ஒருவருக்கு மட்டும் இருக்கும் உடல் உபாதை - தீர்வில்லாத உபாதை காரணமாக மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.  ஆனாலும் பெற்ற மகளுக்கே விஷம் கொடுக்க எந்தப் பெற்றோருக்குத் தான் மனம் வரும்.  அதிகாலை நேரம் - வாசலில் குடுகுடுப்பைக்காரர் வந்து நல்ல வார்த்தைகள் சொல்கிறார்.  ஆனாலும் மனது தற்கொலை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறது.  மனதைக் கல்லாக்கிக் கொண்டு பெற்ற பெண்ணுக்கு விஷத்தினை - அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீபூதித் தாத்தா என்பவர் கொடுத்த சதுரகிரி பிரசாதமான பஞ்சாமிருதத்துடன் - கலந்து மகளுக்குக் கொடுத்து தானும் உண்டு, கணவனுக்கும் கொடுக்கிறாள்.  


சாப்பிட்டு இரண்டு மூன்று நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும் கொடிய விஷம் அது - ஆனால் என்ன அதிசயம்?  சோம்பியிருந்த மகள் உற்சாகமாக எழுந்து ஸ்கிப்பிங் ரோப் வைத்து ஆடத் தொடங்குகிறாள்.  எதனால் அந்த விஷம் வேலை செய்யாமல் போனது.  அதனைக் கலந்த பஞ்சாமிருதத்தில் அப்படி என்ன சக்தி இருந்தது? மகளின் பிரச்சனைகள் தீர்ந்தது போலத் தோன்றுகிறதே என்று அதிசயத்தில் திளைத்திருக்க, மகள் மீண்டும் துவண்டு போகிறாள்.  கொடிய விஷத்தினைச் சாப்பிட்டும் மரணம் சம்பவிக்காமல் மாறாக உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததற்குக் காரணமாக இருந்தது விபூதித் தாத்தா தந்த பஞ்சாமிர்தம் தான் என்று பரிபூர்ணமாக நம்புகிறார்கள்.  மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பேச, அவரும் அதிசயித்து அந்த விபூதித் தாத்தாவிடம் சென்று பஞ்சாமிர்தத்தின் சிறப்பு பற்றிக் கேட்கச் சொல்கிறார்.  


வீபூதித் தாத்தாவைத் தேடினால் அவர் சதுரகிரி சென்றிருக்கிறார் என்று தெரிய மகளையும் மனைவியையும் வீட்டில் விட்டு விட்டு சதுரகிரி நோக்கி பயணிக்கிறார் அந்த அப்பா.  சதுரகிரி காட்டில் அவருக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைக்கிறது, சித்தர்களைச் சந்த்தித்தாரா? மலைக்குள் என்ன விதமான அதிசயங்கள் இருக்கின்றன என்பவற்றைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.  என்னதான் மலைக்கு சிறப்புகள் பல இருக்கின்றன என்றாலும் இந்தக் காலகட்டத்தில் நிறைய போலி மனிதர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்பதைனையும் கதை வழி நமக்குச் சொல்கிறார் ஆசிரியர்.  கதையில் வரும் அந்தச் செல்ல மகளுக்குத் தேவையான மருந்து கிடைத்ததா, அங்கே என்ன வித நிகழ்வுகள் காணக் கிடைத்தன என்பவற்றை நீங்களே நூலில் வாசித்துத் தெரிந்து கொள்வதே சிறப்பு.   வாசித்துப் பாருங்களேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

16 மார்ச் 2026


ஞாயிறு, 15 மார்ச், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 14 மார்ச், 2026

காஃபி வித் கிட்டு - 230 - இது என்ன? - சக பயணிகள்…. - ரிசப்ஷன் - பூனைக் கல்யாணம் - Raulane Festival - வலைப்பூ உலகம் - இட்லி Chaat


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வெள்ளி, 13 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பகுதி ஐந்து - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வியாழன், 12 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பகுதி நான்கு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******